LATEST NEWS
“WFH-ல ஜாலியா இருக்கலாம்னு நினைச்சா… 2 வாரத்துலயே என் மூளை சூடாயிடுச்சுப்பா…” வீட்ல இருந்து வேலை செய்யுறவங்களுக்கு ஒரு சலூட்… இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகும் பூனே பெண்ணின் வைரல் வீடியோ..!!
பூனேவைச் சேர்ந்த மோகினி சவாண் என்ற பெண் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் நிரந்தர ‘ஒர்க் பிரம் ஹோம்’ முறையையே தங்கள் கனவுப் பணியாகக் கருதும் நிலையில், வெறும் இரண்டு வாரங்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து பணியாற்றிய பிறகு, மோகினிக்கு அதன் சலிப்பு புரிந்துள்ளதாகவும், ஹைப்ரிட் மாடலின் முக்கியத்துவம் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது நிறுவனத்தில் ஆண்டுக்கு இரண்டு வாரங்கள் முழுமையாக வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்படுவதாகவும், ஆனால் அந்த இரு வார அனுபவத்திற்குப் பிறகு நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை நினைத்தால் தனக்கு வியப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து இரண்டு வாரங்கள் வீட்டிலேயே அமர்ந்து வேலை பார்த்ததால் தனது மூளை முற்றிலும் சோர்வடைந்து விட்டதாக மோகினி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்தபடியே பணிபுரிவதால் சொந்த ஊருக்குச் சென்று வேலை செய்பவர்களுக்கும் கூட, பணிச்சுமை குறையாமல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. வார இறுதியிலும் கூட தன்னால் ஒரே ஒரு நாள் மட்டுமே வெளியே செல்ல முடிந்ததாகவும், மற்ற நாட்களில் அதே அலுவலக வேலை, சாப்பாடு என ஒரே மாதிரியான தினசரி வழக்கம் திரும்பத் திரும்பத் தொடர்வதால், வீட்டை விட்டு வெளியேறவே இல்லை என்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வீட்டிலிருந்து பணிபுரிவதையும் வெளியே சென்று வேலை செய்வதையும் சமநிலைப்படுத்த ‘ஹைப்ரிட் மாடல்’ முறையே மிகச் சிறந்தது என்று மோகினி சுட்டிக்காட்டுகிறார். வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகத்திற்குச் செல்லும்போது புதிய உணவுகளைச் சுவைப்பது, நண்பர்களைச் சந்திப்பது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது மற்றும் கருத்துக்களைப் பகிர்வது என மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. மேலும், சிறிதளவு வெளி உலகத் தொடர்பும் பயணமும் சாத்தியமாகிறது. எனவே, நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களைத் தான் பாராட்டுவதாகவும், அவர்கள் இதை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என்றும் கூறி, ஹைப்ரிட் முறையே சிறந்தது என அவர் முடித்துள்ளார்.
