LATEST NEWS
“குதிரை ரேஸ்லாம் பழைய ஸ்டைல் சார்..! இணையத்தை கலக்கும் பாகிஸ்தானின் ‘கழுதை வண்டி ரேஸ்’..! “ஜெயிச்சதும் உரிமையாளருக்கு கொடுத்த அந்த ஸ்மைல் இருக்கே… வைரல் வீடியோ..!!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பாரம்பரிய ‘கழுதை வண்டி பந்தயத்தின்’ வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகஸ்ட் 16 அன்று நேட்டிவ் ஜெட்டி பாலம் முதல் கமிஷனர் அலுவலகம் வரை சுமார் 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த பந்தயம் நடைபெற்றது. இதில் ஏராளமான கழுதை வண்டிகள் பங்கேற்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற பிறகு, அதன் உரிமையாளர் கழுதையைக் கட்டிப்பிடித்து மகிழ்ந்ததும், அதைக் கண்டு அந்த கழுதை புன்னகைப்பது போல் காட்சியளித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கராச்சியின் லயாரி (Lyari) பகுதியைச் சேர்ந்த இந்த பாரம்பரிய விளையாட்டு சுமார் ஒரு நூற்றாண்டு காலம் பழமையானது. 18 ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மீன்பிடித் தொழில் செய்த மீனவர்கள் தங்களின் வண்டிகளைக் கொண்டு பந்தயம் நடத்தத் தொடங்கினர். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பாரம்பரியத்தை லயாரி பகுதி மக்கள் இன்றளவும் உயிர்ப்புடன் பாதுகாத்து வருகின்றனர். இந்தப் பந்தயத்தில் பங்கேற்கும் கழுதைகளுக்காக பிரத்யேகமான லேசான வண்டிகள் தயார் செய்யப்படுவதோடு, அவற்றுக்கு சுண்டல் மற்றும் வேர்க்கடலை போன்ற வலிமை தரும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்த பாரம்பரிய விளையாட்டைத் தொடர்ந்து காப்பாற்றும் வகையில், பாகிஸ்தான் நிர்வாகம் தற்போது இதற்கு அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இனி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத் தினத்தின் போது இந்த கழுதை வண்டி பந்தயம் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படும் என்று கராச்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
