CRIME
“அடக்கொடுமையே.. அதிவேக காரின் மோதலில் சிதறிய பக்தர்கள்..” 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்… துர்கா பூஜை கொண்டாட்டத்தில் நேர்ந்த கொடூரம்… அரசியல் கட்சி கொடியால் வெடித்த புதிய சர்ச்சை.!!
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அடல் பாதையில் துர்கா பூஜை திருவிழாவை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாடலிபுத்ரா காவல் எல்லைக்குட்பட்ட மகேஸ்நகர் பகுதியில் நேரிட்ட இந்த விபத்தில், சுமார் 100 கி.மீ வேகத்தில் வந்த அந்த கார் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது தறிகெட்டு மோதியுள்ளது. ஓட்டுநர் மதுபோதையில் இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், விபத்தை ஏற்படுத்திய பிறகு அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் கவிழ்ந்தது.
இந்தக் கொடூர விபத்தில் காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாட்னா காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய அந்த ஸ்கார்பியோ கார் ஓர் அரசியல் தலைவருக்குச் சொந்தமானது என்றும், அதன் மீது ஜேடியு கட்சியின் கொடி பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், வாகனப் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் யார் என்பது குறித்தும், தப்பியோடிய ஓட்டுநர் குறித்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
