LATEST NEWS
“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” பாமகவை இழுக்க தூது.. டிடிவி தினகரனுக்கும் திமுக ரகசிய ஆஃபர்..? திமுகவின் ‘பிளான் B’ வியூகம்..!!
அதிமுக கூட்டணியில் நீடித்து வரும் பாமகவை தங்களது பக்கத்திற்கு இழுக்க திமுக தீவிரமாக காய்நகர்த்தி வருவதாக அறிவாலய வட்டாரத்தில் இருந்து புதிய தகவல்கள் கசிந்துள்ளன. தவெக கட்சிக்கு ஆதரவளித்த கூட்டணி கட்சிகள் மீண்டும் தங்களை நோக்கித் திரும்பி வரும் என்ற நம்பிக்கை இல்லாததால், திமுக தலைமை இந்த ‘பிளான் B’ திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்படுத்தக்கூடிய அரசியல் இடைவெளியை அல்லது இழப்பை, பாமகவின் வாக்கு வங்கியைக் கொண்டு முழுமையாக நிரப்பிவிடலாம் என்பதே திமுகவின் தற்போதைய பிரதான கணக்காக உள்ளது. விசிகவின் அரசியல் நகர்வுகளால் வட தமிழ்நாட்டில் வாக்குகள் சிதறாமல் தடுக்க பாமகவை உள்ளே இழுப்பதே சரியான வியூகமாக இருக்கும் என்று அறிவாலயம் கருதுகிறது.
மறுபுறம், அதிமுகவுக்குள் மீண்டும் நுழைவதற்குத் தீவிரமாக முயற்சி செய்து வரும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் திமுக தரப்பில் இருந்து ரகசிய தூது அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியை உடைக்கவும், தென் மாவட்டங்களில் தங்களுக்குச் சாதகமான அரசியல் சூழலை உருவாக்கவும் இந்த ஆப்சனை திமுக பயன்படுத்தத் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
