LATEST NEWS
“அரசுக்கு டாஸ்மாக் காசுதான் பெருசா..?” பள்ளி கொடிகம்பத்தில் தொங்கிய மதுபாட்டில்… தேனி சம்பவத்தால் கொதித்தெழுந்த வானதி சீனிவாசன்..!!
தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தேசியக் கொடி ஏற்றும் கொடிக் கம்பத்தில் காலி மதுபாட்டில் கட்டித் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி பகுதியில் நடைபெற்ற இந்தச் செயலின் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, தேசியக் கொடிக்கும் கொடிக்கம்பத்திற்கும் இழைக்கப்பட்ட அவமரியாதையாகப் பார்க்கப்பட்டு கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். “மது சமுதாயத்தின் பெரும் சாபக்கேடு என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி; தாயை விட தாய்நாட்டை உயிரினும் மேலாகப் போற்றும் நாட்டில், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேச விரோத சக்திகள் சிலர் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தின் மீது மது பாட்டிலை கட்டி தொங்கவிட்டிருப்பது தேசியக் கொடிக்கும் கொடிக்கம்பத்திற்கும் மிகப்பெரிய அவமரியாதையாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “திருப்பூர் குமரன் பிறந்த நாட்டில் மதுவினால் மதியிழந்து இளைஞர்கள் சீரழிவதைக் காணும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது; தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் வருவாய் மட்டுமே முக்கியமாக உள்ளதே தவிர, இளைஞர்கள் எப்படிப் போனால் என்ன என்ற நிலை உள்ளது” என்றும் அவர் தனது கண்டனப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
