LATEST NEWS
“என் மகன் இனி வரப்போவதில்லை, ஆனால்” சாதிய ரீதியான துன்புறுத்தலில் தற்கொலை செய்த கோவை மாணவனின் தந்தை வெளியிட்ட கண்ணீர் அறிக்கை..!!
கோவையில் சாதி ரீதியான துன்புறுத்தலால் 11-ஆம் வகுப்பு படிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் அகிலன் (15) என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவனின் பெற்றோர் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், பள்ளியில் நடைபெற்ற சாதிய பாகுபாடே தற்கொலைக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பள்ளியில் ‘ஸ்காலர்ஷிப்’ விபரங்களைக் கேட்கும் போது, ஆசிரியர்கள் அகிலனின் சாதி குறித்தும், மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்தும் கேட்டுள்ளனர். இதற்கு மாணவர் “ஆம்” என்று பதிலளித்ததை அடுத்து, சக மாணவர்கள் அவனுடன் பேசுவதைத் தவிர்த்து, கேலி கிண்டல் செய்து, சாதிப் பெயரைச் சொல்லித் தாக்கியதாகத் தந்தை அசோக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பெற்றோர் கதறியுள்ளனர்.
இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி ஆசிரியர் விஜயகுமாரைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் சில மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. “என் மகன் இனி வரப்போவதில்லை, ஆனால் இனி எந்தவொரு மாணவருக்கும் கல்வி நிலையங்களில் சாதிப் பெயரால் இந்த அவலம் நேரக் கூடாது” என்று மாணவனின் தந்தை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
