LATEST NEWS
பள்ளியா..? கொட்டகையா..? ஆடு மேய்க்கச் சொன்ன ஆசிரியை சஸ்பெண்ட்..! ரூ.4.40 லட்சம் சுருட்டிய கூத்தும் அம்பலம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள அலைபூர் பகுதியில் இயங்கும் பிக்காவாலா அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை காஷிமா காதுன் என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கிய ஆட்டை பள்ளி வளாகத்தில் கட்டிவைத்து, அதைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்காகப் பராமரித்து வந்துள்ளார். மேலும், பள்ளிக்கு வரும் சிறு குழந்தைகளைப் பாடம் படிக்க வைக்காமல், ஆட்டுக்குத் தேவையான இலை தழைகள் மற்றும் தீவனங்களை வெட்டி வரக் காட்டுக்கு அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆட்டின் தீவனத்திற்காக மாணவர்களைப் பயன்படுத்தியது மட்டுமன்றி, பள்ளியின் எல்லைச் சுவர் கட்டுவதற்காக அரசு ஒதுக்கிய ரூ.4.40 லட்சம் நிதியை முறைகேடு செய்து கையாடல் செய்ததாகவும் ஆசிரியை காஷிமா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், மாவட்ட முதன்மை வளர்ச்சி அலுவலரிடம் இது குறித்துப் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு நடத்திய ஆய்வில், ஆட்டைப் பள்ளியில் கட்டியது, குழந்தைகளை வேலை செய்ய வைத்தது மற்றும் நிதி முறைகேடு ஆகிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்மை என உறுதி செய்யப்பட்டது.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி சச்சின் கசானா, ஆசிரியை காஷிமா காதுனை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறி, கல்வித் துறையின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணி இடைநீக்கக் காலத்தில் அவர் பிக்காவாலா பள்ளியிலிருந்து மாற்றப்பட்டு, பூரைனி வட்டார வள மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.
