LATEST NEWS
இரவோடு இரவாக EPS தலையில் விழுந்த இடி… அதிமுகவினரை கூண்டோடு தவெகவில் சேர்த்த மகேந்திரன்.. பெரும் பரபரப்பு..!!
அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளருமான மடத்துக்குளம் சி. மகேந்திரன் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு ஊராட்சியில் தவெகவின் மாபெரும் கட்சி இணைப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக உட்பட பல்வேறு மாற்று அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் திரளாகப் பங்கேற்று, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கொள்கைகளை ஏற்று தவெகவில் ஐக்கியமாகினர்.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தவெகவுக்குத் தாவி வரும் நிலையில், தற்போது அடிமட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களையும் தவெக தன் பக்கம் இழுக்கத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கியக் கோட்டையாகக் கருதப்படும் திருப்பூர் மாவட்டப் பகுதிகளில், அக்கட்சியின் மாவட்ட அளவிலான மூத்த தலைவர்கள் தவெகவில் இணைந்து வருவது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தவெகவின் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் ஒரு முக்கிய நகர்வாகவும், அதிமுகவுக்குக் கூடுதல் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
