“உயிர் இருந்தும் என் பிள்ளையை காப்பாத்த போலீஸ் விடல” • கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லாரி.. மகனை இழந்து கதறும் தாய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உயிர் இருந்தும் என் பிள்ளையை காப்பாத்த போலீஸ் விடல” • கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லாரி.. மகனை இழந்து கதறும் தாய்..!!

Published

on

மத்தியப் பிரதேசம் குவாலியரில் உள்ள புகழ்பெற்ற சீத்லா மாதா கோவில் அருகே நேற்றிரவு கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து நடத்திய கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் சீன்னூர் சாலையின் இறக்கத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காகச் சாலையோரம் காத்திருந்த பக்தர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதோடு, அங்கிருந்த கடைகளின் மீதும் பலத்த வேகத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த மோதலின் வீரியம் தாங்காமல் கோவிலின் பிரதான நுழைவாயில் சுவர் இடிந்து விழுந்து, அதன் இடிபாடுகளுக்குள் பல பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இக்கோரச் சம்பவத்தில் 14 பேர் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் பலியானதோடு, இரண்டு ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 35-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த குவாலியர் மாவட்ட ஆட்சியர் ருச்சிகா சவுகான் தலைமையிலான நிர்வாகக் குழுவினர் மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியின் பிரேக் பழுதடைந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement

பலி எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில், விபத்து நடந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 16 வயது சிறுவன் கணேஷ் தனது அண்ணன் கண்ணெதிரே துடிதுடித்துப் பலியானதும், 19 வயது மகனை இழந்த கிரண் என்ற தாய், தனது மகனின் உயிர் துடிப்பு இருந்தும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை என கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளதும் நெஞ்சைப் பதற வைக்கிறது. சாதாரண நாட்களில் இருசக்கர வாகனங்கள் கூட அனுமதிக்கப்படாத கோவில் நுழைவாயில் பகுதிக்குள் இவ்வளவு பெரிய கனரக லாரி எப்படி நுழைந்தது எனப் பொதுமக்கள் தரப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துக் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in