LATEST NEWS
‘மூடர் கூட்டத்தின் ஆட்டம்’ முடிவுக்கு வரும் என் ஸ்டாலின் போட்ட பதிவு… “Dummy Daddy” போல ஸ்டாலின் புலம்புறாரு… என பதிலடி கொடுத்த தவெக..!!
கோவையில் பெரியார் அறிவுலகம் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத் திறப்பு விழாவை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் தற்போதைய ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக) இடையே கடுமையான ‘ஸ்டிக்கர்’ அரசியல் மோதல் வெடித்துள்ளது. தங்களது திராவிட மாடல் ஆட்சியில் ₹300 கோடி மதிப்பீட்டில், 1.98 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் 1.25 லட்சம் நூல்களுடன் உலகத்தரத்தில் இந்த அறிவுக் கோயிலை முழுமையாகக் கட்டி முடித்தது திமுக அரசுதான் என்று மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார். பணிகள் முடிந்தபோதே திறக்காமல், முழுமை பெறக் காத்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், “யார் திறந்தால் என்ன! எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் ரீதியாகத் தவெக அரசைச் சாடிய மு.க.ஸ்டாலின், “உள்ளங்கையால் உதயசூரியனை மறைக்க முயல்வதைப் போல, அறிவியல் மையத்தில் பொறிக்கப்பட்டிருந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரைத் தற்போதைய ஆட்சியாளர்கள் மறைத்து வைத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சராகத் தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின்பும்கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் ஸ்டாலின் நினைவுதான் வரும் என எதிரிகள் அஞ்சுவதாகவும், அறிவுச் சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த ‘மூடர் கூட்டத்தின் ஆட்டம்’ விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் (TVK IT Wing) சமூக ஊடகங்களில் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. முதலமைச்சர் விஜய் இந்த மையத்தைத் திறந்து வைப்பதால், பொறாமை தாங்காமல் “Dummy Daddy” போல ஸ்டாலின் புலம்பி வருவதாக அவர்கள் சாடியுள்ளனர். மேலும், மக்கள் வரிப்பணத்தில் கட்டிய அரசுத் திட்டங்களுக்குத் திமுக ஸ்டிக்கர் ஒட்டி ‘கிரெடிட்’ திருட முயல்வதாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போதைப்பொருள் கலாச்சாரம் பரவியுள்ளதற்குப் பொறுப்பேற்கத் திராணியில்லாமல் “Sweet Uncle” போல வீட்டில் ஓய்வெடுக்குமாறும் தவெகவினர் மிகத் தீவிரமாகப் பாய்ந்துள்ளனர்.
