CRIME
“அம்மா, அப்பாவைத் தனியா விட்றாத அக்கா…” அடுத்த ஜென்மத்தில் நல்ல பிள்ளையா பிறப்பேன்… ராக்கி கட்டிய சில மணி நேரத்தில் அக்காவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தம்பி தற்கொலை… நடந்தது என்ன..?
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் பகுதியில் ஆன்லைன் கேமிங்கில் பணத்தை இழந்த 17 வயது பள்ளி மாணவன், ரக்ஷா பந்தன் பண்டிகை நாளன்று தனது சகோதரிக்கு உருக்கமான பதிவை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரோஹித் சாஹேப்ராவ் தங்கர் என்ற 11-ஆம் வகுப்பு மாணவன், பண்டிகையை முன்னிட்டு தனது தந்தையுடன் சகோதரி வீட்டிற்குச் சென்று கையில் ராக்கி கயிறு கட்டிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்த பிறகு தனது சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரோஹித், “அக்கா எல்லாவற்றையும் பார்த்துக் கொள், அம்மா அப்பாவைத் தனியாக விட்டுவிடாதே, நான் கிளம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், தான் ஆன்லைன் கேமிங்கில் பணத்தை இழந்துவிட்டதாகத் தனது நண்பர் ஒருவருக்கு வீடியோ செய்தியாகவும் அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக ரோஹித் வீட்டிற்கு விரைந்தனர், ஆனால் அதற்குள் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோஹித் தனது மற்றொரு பதிவில், “அடுத்த முறை நான் வரும்போது எல்லோருக்கும் பிடித்தமானவனாக வருவேன், என் மீதான கறைகளைத் துடைப்பேன்” என்றும் எழுதியுள்ளார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
