LATEST NEWS
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..! இனி ஒரே கடையில் இருக்க முடியாது… தமிழக அரசின் புதிய விதி..!!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய பணியிட மாற்றம் செய்யப்படும் என்ற புதிய விதிமுறைகளை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கே. நந்தகுமார் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒரு மதுக்கடையில் 3 ஆண்டுகள் முழுமையாகப் பணியை நிறைவு செய்த ஊழியர்கள் கட்டாயமாக வேறு கடைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும், இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு கடையிலும் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, இந்த பணியிட மாறுதல்கள் மற்றும் புதிய இடங்களில் பணியில் சேரும் பணிகள் அனைத்தும் வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள் தினசரி விற்பனையின் அடிப்படையில் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ வகை கடைகளில் 9 பேரும், ‘பி’ வகை கடைகளில் 8 பேரும், ‘சி’ வகை கடைகளில் 5 பேரும் பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஊழியர்களின் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையிலும் எத்தனை ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் மற்றும் யார் 3 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டு அதற்கேற்ப இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், 2028-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ந் தேதியைக் கணக்கில் கொண்டு, 3 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான கடையைத் தெரிவிக்கலாம் என்றாலும், காலிப்பணியிடங்கள், கடையின் வகை மற்றும் மாவட்டத்தின் ஒட்டுமொத்த பணியாளர் தேவையின் அடிப்படையிலேயே இடம் ஒதுக்கப்படும் என்பதால், ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று எந்த ஊழியரும் உரிமை கோர முடியாது.
