LATEST NEWS
அம்பேத்கர், பெரியார் பெயர்கள் திடீர் நீக்கம்..! பின்னணியில் பெரிய சதி இருக்கிறதா..? அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் திருமாவளவன் வைத்த அதிரடி செக்..! தமிழக அரசியலில் அடுத்தடுத்து கிளம்பும் புயல்..!!
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழக சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்கள் என்று நம்புவதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிழைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டது ஏற்புடையதல்ல என்றும், அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரை அச்சுறுத்த நினைத்து தன்னிச்சையாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வரும் கோரிக்கையைத் தாம் முழு மனதோடு வரவேற்பதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசு தலித் மக்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய திருமாவளவன், தலித் மக்களைப் பாதுகாக்கத் தனிச்சட்டம் இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசு நிறைவேற்ற வேண்டியுள்ளது என்றார். தற்போதைய அரசு இந்தப் பணிகளைச் செய்யும் என்று நம்புவதாகவும், அதனைச் செய்யச் சொல்லித் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
