CINEMA
“அவர்தான் ரியல் டைகர், நான் பூனை..” சல்மான் கானை ‘புலி’ என புகழ்ந்ததால் வந்த வினை… டைகர் ஷெராப் காரை துளைத்த 7 தோட்டாக்கள்… வெளியான பகீர் காரணம்..!!
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராபை குறிவைத்து கடந்த அக்டோபர் 18 அன்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றைய தினம் மும்பையின் ஜூஹு பகுதியில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் சென்றுகொண்டிருந்த டைகரின் பிஎம்டபிள்யூ காரை நோக்கி 3 மர்ம நபர்கள் ஏழு முறை சுட்டுவிட்டு, பைக்கில் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் டைகரின் ஓட்டுநரும், ஒரு பாதசாரியும் காயமடைந்தனர்; டைகர் காயமின்றி தப்பினர். சம்பவத்திற்குப் பிறகு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர் பொறுப்பேற்று ஆடியோ வெளியிட்ட நிலையில், ராஜஸ்தானின் கோட்டா ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நடிகர் டைகர் ஷெராப் மீது ஏன் தாக்குதலில் ஈடுபட்டோம் என்பதற்கான காரணத்தை அதில் ஒருவன் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டு தனது ‘ஹீரோபந்தி 2’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளின்போது, டைகர் ஷெராப் ஒரு பேட்டியில், “இந்தத் துறையில் ஒரே ஒரு டைகர் தான் இருக்கிறார். அவர் சல்மான் சார். அவருக்கு முன்னால், நான் ஒரு பூனை போல. நான் சிம்பா… ஒரு புலிக்குட்டி” என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், தற்போது நடந்த இந்தத் தாக்குதலுக்கான காரணங்களில் அதுவும் ஒன்றாக இருந்தது என்று குற்றவாளி கூறியதாகத் தேசிய ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
கடந்த 1998 அக்டோபர் மாதத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ‘ஹம் சாத் சாத் ஹைன்’ படப்பிடிப்பின்போது சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடி சர்ச்சையில் சிக்கினார். பிளாக்பக் வகை மான் பிஷ்னோய் சமூகத்தால் புனித விலங்காக பார்க்கப்படுவதால், சல்மான் கானைக் கொலை செய்ய பிரபல கும்பல் தலைவனான லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், அவருடன் தொடர்புடையவர்களையும் இந்த கும்பல் குறிவைத்து வருவதன் ஒரு பகுதியாகவே, சல்மான் கானை ‘புலி’ எனப் புகழ்ந்த நடிகர் டைகர் ஷெராப் மீதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
