LATEST NEWS
“ஐயோ என் பிள்ள போச்சே…” ஏரிக்கரையில் கதறித் துடித்த பெற்றோர்… நீச்சல் பழகச் சென்று துடிதுடித்து பலியான 2 சிறுவர்கள்..! விடுமுறை நாளில் நேர்ந்த பெருஞ்சோகம்..!!
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சண்முகாவின் மகன் லேகன் (வயது 13), கணேஷின் மகன் புனித் (11). இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 6 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று கிராமத்திற்கு அருகில் உள்ள ஒசாகெரே ஏரிக்கு இருவரும் நீச்சல் பழக சென்றுள்ளனர்.
அங்கு ஏரியில் மற்றவர்களுடன் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, லேகனும் புனித்தும் கரையின் அருகில் நீச்சல் பழகினர். அப்போது நீச்சல் சரியாக தெரியாததால் அவர்கள் இருவரும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றனர். இதனால் அவர்களால் நீந்தி வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் ஏரிப்பகுதிக்கு சென்று தேடியுள்ளனர். அங்கு சிறுவர்கள் இருவரின் உடல்களும் ஏரியில் மிதப்பதைக் கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த சாகர் புறநகர் போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
