LATEST NEWS
“தேவையில்லாம அவசரப்பட்டுட்டோமோ” விசிகவின் கூட்டணி அறிவிப்பு… தவெகவிடம் பல்பு வாங்கிய திருமாவளவன்.. கடும் அதிருப்தியில் தொண்டர்கள்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு’ தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இனிவரும் காலங்களில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தே பயணிப்போம் என்று அதிரடியாகக் கூட்டணி முடிவை அறிவித்தார். விசிகவின் இந்தத் திடீர் அரசியல் நகர்வு அக்கட்சித் தொண்டர்களிடையே தற்காலிகமாகப் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதற்குப் பின்னால் எழுந்துள்ள சலசலப்புகள் விசிக கூடாரத்தைக் கலங்கடித்துள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கு விசிக தரப்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. அதைவிட முக்கியமாக, ‘விசிகவை கூட்டணியில் வரவேற்கிறோம்’ என்றோ அல்லது திருமாவளவனின் பேச்சு குறித்தோ தவெக தலைமையிடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான வரவேற்போ, அறிக்கையோ வெளியிடப்படவில்லை. கூட்டணி குறித்து தவெக காட்டும் இந்த அனல் பறக்கும் மௌனம் மற்றும் அலட்சியப் போக்கு விசிகவின் முன்னணி தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தவெக தரப்பில் இருந்து எந்தவிதமான சாதகமான சிக்னலும் வராத நிலையில், அவசரப்பட்டு பொதுமேடையில் கூட்டணியை அறிவித்துவிட்டோமோ என்ற சுயபரிசோதனையில் விசிகவினர் இறங்கியுள்ளனர். ஆளுங்கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, தவெகவின் பிடிவாதமான எதிர்வினையால் விசிகவின் அரசியல் கௌரவத்திற்குச் சவாலாக மாறியுள்ளதாகக் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன. இதனால், மாநாட்டிற்குப் பிந்தைய உற்சாகம் மறைந்து, விசிகவினர் தற்போது கடும் அதிருப்தியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
