LATEST NEWS
“நிம்மதியா மலம் கழிக்க கூட முடியல” நாற்காலிகளில் ஓட்டை போட்டு, துணிகளை வைத்து மறைத்து… கற்காலத்திற்கு மாறிய காசா.. இஸ்ரேல் முற்றுகையால் கண்ணீரில் மக்கள்..!!
இஸ்ரேலின் தொடர்ந்த முற்றுகை மற்றும் தாக்குதல்கள் காரணமாக, காசா பகுதி மக்கள் தங்களின் மிக அடிப்படையான சுகாதார உரிமைகளை இழந்து கற்கால வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவும் மருந்தும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பஞ்சமும் நோய்நொடிகளும் வாட்டி வதைக்கும் நிலையில், தற்போது அங்கு கழிவறைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சாதாரண கழிப்பறை இருக்கையின் விலை 503 முதல் 671 டாலர் வரை உயர்ந்துவிட்டதால், சாதாரண மக்களுக்கு அது எட்டாக்கனியாக மாறியுள்ளது.
கழிப்பறை வசதி இல்லாததால், நிலத்தில் ஆழமான குழி தோண்டி, அதன் மேல் துளையிடப்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளை வைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். முறையான சுவர்களோ, கதவுகளோ இன்றி வெறும் துணிகளை மட்டுமே மறைப்பாகக் கொண்டுள்ள இந்த தற்காலிக அமைப்புகளை, முகாம்களில் உள்ள 20 முதல் 25 பேர் வரை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவலம் நீடிக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வசதிகள் இல்லாததால், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அன்றாடம் சொல்லொணா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, காசாவில் பாதியளவு மக்களுக்குக் கூட அடிப்படை சுகாதார வசதிகள் எட்டவில்லை. தற்காலிக கூடாரங்களில் வாழும் மக்களில் 60% பேர் திறந்தவெளி மனிதக் கழிவுகளுக்கும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீருக்கும் மிக அருகிலேயே வாழக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் விளைவாக வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் போன்ற தொற்றுகள் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உதவ வேண்டும் என காசா மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
