LATEST NEWS
“சாவதா இருந்தா சாவுங்க.. பஸ்ஸலா நிறுத்த முடியாது..” புகை வருதுன்னு பயணிகள் அலறியும் நிறுத்தாமா சிரிச்ச டிரைவர்.. 9 பேரை பலிவாங்கிய கொடூரம்..!!
கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் இரட்டை அடுக்கு பேருந்து ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். புகையால் சூழப்பட்ட பேருந்திலிருந்து தப்பிக்க முயன்ற அதிர்ச்சிகரமான தருணங்களை பயணிகள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். தான் தூங்கிக் கொண்டிருந்தபோது மற்றொரு பயணி தன்னை எழுப்பி பேருந்தில் தீப்பிடித்துள்ளதாகக் கூறியதாகவும், அடர்ந்த புகை மற்றும் பீதிக்கு நடுவே கஷ்டப்பட்டு வெளியே தப்பியதாகவும் பிழைத்த பயணி ஒருவர் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களில் ஒருவரது உறவினரான க காயமடைந்த பெண்மணி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்கு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள செவாடா கிராமத்தைச் சேர்ந்த பாபா துர்ஜன் என்ற நேரில் பார்த்த சாட்சி கூறுகையில், பேருந்தின் கூரையிலிருந்து தீப்பிழம்புகள் வருவதைக் கண்டதாகத் தெரிவித்தார். விபத்து நடந்த 10 நிமிடங்களுக்குள் சுமார் 3,000 முதல் 4,000 பேர் வரை அங்கு கூடியதாகவும், அடுத்த 10 முதல் 20 நிமிடங்களில் காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் அவசரக்கால மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஓட்டுநரின் அறையிலிருந்து ஏதோ எரியும் வாசனை வருவதாகப் பயணிகள் எச்சரித்தும், ஓட்டுநரும் நடத்துநரும் அதை அலட்சியப்படுத்தியதாக சுனில் குமார் என்ற பயணி புகார் அளித்துள்ளார். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பீடி அல்லது சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகவும், பேருந்தை நிறுத்தக் கோரி பயணிகள் கத்தியபோது, “சாவதாக இருந்தால் சாவுங்கள், பேருந்தை நிறுத்த மாட்டோம்” என்று கூறி சிரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தீ வேகமாகப் பரவியதை அடுத்து சிலர் குதித்துத் தப்பிய நிலையில், மற்றவர்கள் உள்ளேயே மாட்டிக்கொண்டனர். காயமடைந்தவர்கள் ஜேவாரில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 9 பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் மற்றும் அலட்சியம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
