“ஹமாஸுக்கு ஆதரவு தர்றீங்களே… உங்களுக்கு வெட்கமா இல்லையா..?” நியூயார்க் மேயரை விளாசிய இஸ்ரேல் பிரதமர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஹமாஸுக்கு ஆதரவு தர்றீங்களே… உங்களுக்கு வெட்கமா இல்லையா..?” நியூயார்க் மேயரை விளாசிய இஸ்ரேல் பிரதமர்..!!

Published

on

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு போர் குற்றவாளி என நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி அறிவித்த நிலையில், “ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரித்த உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என இஸ்ரேல் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, நியூயார்க் மேயர் மம்தானி கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் மாகாணத்திற்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்வோம் எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள சில குடியரசு கட்சி எதிர்ப்பாளர்கள் மம்தானியின் பாலஸ்தீன ஆதரவு பிரசாரத்தையும், காசாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மீதான அவரது விமர்சனத்தையும் சுட்டிக்காட்டி, அவரை யூத விரோதி என விமர்சனம் செய்தனர். இந்த குற்றச்சாட்டை மம்தானி நிராகரித்ததோடு, இஸ்ரேல் அரசாங்கத்தின் கொள்கை மீதான தனது விமர்சனம் யூத மக்களின் மீதான வெறுப்பாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறினார். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், மம்தானி வெறுப்பை தூண்டுவதாகவும், யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மக்களுக்கும் மேயராக இருக்க வேண்டியவர் ஒரு குழுவை மற்றொரு குழுவினருக்கு எதிராகத் திருப்ப முயற்சிப்பதாகவும் கூறினார்.

Advertisement

இதற்கிடையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நெதன்யாகுவை ஒரு போர் குற்றவாளி எனவும், பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான கொடூரமான இனப்படுகொலையின் சூத்திரதாரி எனவும் மம்தானி மீண்டும் விமர்சனம் செய்தார். இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாக நெதன்யாகு வெளியிட்ட காணொளி காட்சியில், “நான் ஐ.நா மாநாட்டிற்கு வருகிறேன். நமது படை வீரர்களைப் பற்றிய உண்மையையும், உங்களைப் பற்றிய உண்மையையும் நான் கூறப் போகிறேன். மம்தானி அவர்களே, யூத மக்களைப் படுகொலை செய்த ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிப்பதற்கும், நியூயார்க் நகரில் வசித்து வரும் யூதர்களுக்கு எதிராகக் கலவரங்களை தூண்டியதற்கும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in