CRIME
“எங்கள் அதிகாரிகளைத் தொட்டால் அவ்வளவுதான்..!” அபராத ரசீதைக் கிழித்து வீசிய 58 வயது நபர்.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
இங்கிலாந்தில், பார்க்கிங் விதியை மீறியதற்காக வழங்கப்பட்ட அபராத ரசீதைக் கிழித்து, பெண் அதிகாரி மீது வீசி ஆக்ரோஷமாக நடந்துகொண்ட 58 வயதான ஸ்டீபன் லாங் என்ற நபருக்கு நீதிமன்றம் சுமார் 2.43 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. எக்ஸ்செக்கர் குவே என்ற வாகன நிறுத்துமிடத்திற்கு வெளியே லாங் தனது காரை நிறுத்தியதால், அங்குப் பணியில் இருந்த பெண் அதிகாரி அவரது கார் கண்ணாடியில் அபராத ரசீதை ஒட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லாங், அந்த ரசீதை ஆக்ரோஷமாகக் கிழித்து பெண் அதிகாரி மீது வீசியுள்ளார். இந்தச் செயல் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும், அந்த அதிகாரி தனது சட்டையில் அணிந்திருந்த பாக்கெட் கேமராவிலும் துல்லியமாகப் பதிவாகியிருந்தது.
அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்து, அவமரியாதையாக நடந்துகொண்ட இந்தச் சம்பவம் குறித்து ட்ரூரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது லாங் நேரில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, அவர் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, அவருக்கு 2.43 லட்சம் ரூபாய் அபராதமும், கூடுதலாக 12,693 ரூபாய் நீதிமன்றக் கட்டணமும் செலுத்த உத்தரவிட்டார். இதுகுறித்து சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத் துறைக்கான அமைச்சரவை உறுப்பினர் தாலியா மாரிங்டன் கூறுகையில், “பொது இடத்தில் குப்பைகளை வீசுவதும், கடமையைச் செய்யும் ஓர் அதிகாரியிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதும் சகித்துக்கொள்ள முடியாதவை; எங்கள் அதிகாரிகள் மீதான எந்தவொரு முறைகேட்டையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று எச்சரித்துள்ளார்.
