CRIME
“எங்களுக்கு புல்லட் புரூப் ஜாக்கெட் போடுங்க..” பிரபல கொலையாளிகள் செய்த விசித்திர மனு.. நீதிமன்றத்தில் பரபரப்பு..!!
ஹரியான்வி பாடகர் அங்கித் பாலியன் கொலை வழக்கில் தொடர்புடைய தீபக் தீத்தர் மற்றும் யோகேஷ் துண்டா ஆகிய இரு பிரபல கேங்க்ஸ்டர்கள், தங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது புல்லட் புரூப் ஜாக்கெட் மற்றும் கால்களில் விலங்கிட வேண்டும் என டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் விசித்திரமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த இரு குற்றவாளிகளும், அங்கித் பாலியன் கொலை வழக்கு தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லியில் உள்ள சிஜேஎம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்த இடமாற்றத்தின்போது, உத்தரப் பிரதேச காவல்துறையினரோ அல்லது உ.பி சிறப்புப் படைப் போலீசாரோ தங்களைத் தப்பியோட முயன்றதாகக் கூறி போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்து, தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
குற்றவாளிகளின் இந்த விசித்திரமான மற்றும் பயம் கலந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட டெல்லி நீதிமன்றம், அவர்களை ஷாம்லி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது கைகளில் விலங்கு, கால்களில் சங்கிலி மற்றும் புல்லட் புரூப் ஜாக்கெட் அணிவிக்க வேண்டும் எனச் சிறை நிர்வாகத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச போலீசாரின் என்கவுண்டர் பயம் காரணமாகக் கொலைக் குற்றவாளிகளே தங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பும் விலங்குகளும் கோரியுள்ள இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
