LATEST NEWS
பிஎஃப் அக்கவுண்ட்டில் இருந்து 100% தொகையையும் எடுக்க முடியுமா…?.. புதிய விதிகளும், அதற்கான உச்ச வரம்பும் என்ன…? முழு விவரம் இதோ…!!
நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, தனது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் வசதியை அளிக்கும் நோக்கில் ‘இபிஎஃப்ஓ 3.0’ என்ற அதிநவீன காகிதமில்லா திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்கில் உள்ள பணத்தை இனி நீண்ட நாட்கள் காத்திருக்காமல், கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ (UPI) செயலிகள் வழியாக நேரடியாகத் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு மிக விரைவாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான ஆரம்பகட்டப் பரிசோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய நடைமுறையின் கீழ், ஊழியர்கள் தங்களின் மொத்த சேமிப்புத் தொகையிலிருந்து அதிகபட்சமாக 50% முதல் 75% வரையிலான பணத்தை மட்டுமே அவசரத் தேவைகளுக்கு எடுக்க முடியும்; எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி எஞ்சிய 25% இருப்புத் தொகையைக் கணக்கிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது விதியாகும். மேலும், மருத்துவச் செலவுகள், திருமணம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தானியங்கி முறையில் (Auto-settlement) உடனடியாகப் பணம் வழங்கும் வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக இபிஎஃப்ஓ உயர்த்தியுள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்த வெறும் மூன்று நாட்களுக்குள் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், அவசர காலங்களில் ஊழியர்கள் இனி வாரக்கணக்கில் பிஎஃப் அலுவலகங்களுக்கு அலைந்து காக்க வேண்டிய துயரம் முற்றிலும் முடிவுக்கு வரவுள்ளது.
