LATEST NEWS
“அமைச்சருக்காக சாமி வெயிட் பண்ணணுமா…?” நடை சாத்துவதில் விஐபி சலுகை கூடாது…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி அட்வைஸ்…!!
தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் வருகைக்காகக் இறைவனைத் தரிசிக்கும் நடைமுறையைத் தாமதப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மாநில அரசுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. கடந்த மே 15ஆம் தேதியன்று, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் மதியம் வழக்கம் போல் நடை சாத்தப்பட வேண்டிய நேரத்தைக் கடந்து, தமிழக அமைச்சர் நிர்மல்குமார் அவர்களின் வருகைக்காகக் கூடுதல் நேரம் திறக்கப்பட்டிருந்தது. இந்தச் விவகாரம் மற்றும் கருவறைக்குள் அமைச்சர் தரிசனம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோவில்களில் உள்ள கட்டண தரிசன முறைக்கு எதிரான வழக்கின் விசாரணையின் போது இது நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் நடை அடைப்பதற்கு முன்பே சென்றுவிட்டார் என்றும் சிசிடிவி ஆதாரங்களின்படி பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளித்தார். இந்த விளக்க அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தங்களுக்கு யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இல்லை என்று கூறினர். எனினும், இனிவரும் காலங்களில் அமைச்சர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) போன்ற முக்கியப் பிரமுகர்களின் வருகைக்காகக் கோவில்களில் நடை அடைப்பதைத் தள்ளிப்போட்டு கடவுளைக் காத்திருக்க வைக்கக் கூடாது என்ற முக்கிய அறிவுறுத்தலை வழங்கி வழக்கை நகர்த்தினர்.
