LATEST NEWS
தி.மு.க.வின் முதல் விக்கெட் சரிந்தது..! த.வெ.க.வில் ஐக்கியமாகிறாரா ஓ.பி.எஸ்…? அதிரும் தமிழக அரசியல் களம்..!!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விரைவில் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க. தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டதாலும், கட்சிக்குள் தனக்கு எந்தவொரு முக்கியப் பதவியும் வழங்கப்படாததாலும் ஓ.பி.எஸ். கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போதுள்ள சூழலில் த.வெ.க.வில் இணைவதே சிறந்தது என்று ஓ.பி.எஸ்.-இன் மகன் ரவீந்திரநாத் கூறியதை அடுத்து, அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் தெரிவித்த நிலையில், அவரும் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது. தென் மாவட்டங்களில் த.வெ.க.வை வலுப்படுத்த ஒரு முக்கிய அரசியல் முகம் தேவை என்ற குறையை ஓ.பி.எஸ். மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம் என த.வெ.க. தலைமை கருதுகிறது.
முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு த.வெ.க.வில் முக்கியப் பொறுப்பு வழங்க விஜய் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் விரைவில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணையவுள்ள ஓ.பி.எஸ்., வரும் இடைத்தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். மேலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அவரது மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணையும் முதல் நபர் ஓ.பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
