LATEST NEWS
பணம் வசூல் ஆகுறவரை அவரை வெளியே எடுக்காதீங்க… உயிருடன் மண்ணுக்குள் புதைந்த சாகசக் கலைஞர்… ஹரியானாவை உலுக்கிய சர்க்கஸ் மரணம் பின்னணியில் அதிர்ச்சி பின்னணி..!!
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் உள்ள கோரி கலான் கிராமத்தில் நடைபெற்ற சைக்கிள் சர்க்கஸ் திருவிழாவில், உயிருடன் மண்ணுக்குள் புதையும் ஆபத்தான சாகசத்தை நிகழ்த்திய 27 வயது இளைஞர் தீபக் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஆறு நாட்களாகப் பல்வேறு சாகசங்களைச் செய்து வந்த அவர், சர்க்கஸின் இறுதி நாளில் சாக்கு மூட்டைக்குள் வைக்கப்பட்டு பிரத்யேகமாகத் தோண்டப்பட்ட குழிக்குள் புதைக்கப்பட்டார். அவர் 24 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்டெடுக்கப்படுவார் என்று சர்க்கஸ் அமைப்பாளர்கள் பொதுமக்களிடம் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், சர்க்கஸை வேடிக்கை பார்க்க வந்தவர்களிடமிருந்து சாகசக் கட்டணமாக 7,100 ரூபாய் வசூலாகும் வரை தீபக்கை வெளியே எடுக்கக் கூடாது என அமைப்பாளர்கள் பிடிவாதம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்ட நேரத்தைத் தாண்டி, சுமார் 36 மணி நேரம் அவர் மண்ணுக்குள்ளேயே இருக்க நேரிட்டது. இறுதியில் குழி தோண்டப்பட்டுப் பார்க்கும்போது, போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி தீபக் குழிக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.
பண ஆசையால் இளைஞரின் உயிர் பறிபோன இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மாவட்டக் காவல்துறை, சாகசக் கலைஞரின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் யார் மற்றும் மீட்புப் பணியைத் தாமதப்படுத்தியது ஏன் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
