LATEST NEWS
“மத சடங்குகள் வேண்டாம், பெரியார் கொள்கைப்படி என் உடலை எரியூட்டுங்கள்” தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் கடைசி உயில் அம்பலம்..!!
பிரபல தமிழறிஞரும் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது. வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 90-வது வயதில் மறைந்தார்.
அவரது மறைவுக்குப் பின், சாலமன் பாப்பையா எழுதி வைத்துள்ள உயில் குறித்த நெகிழ்ச்சியான தகவலை அவரது உதவியாளர் பேராசிரியர் ராஜா ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். அதில், “நான் சாதி, மத கோட்பாடுகளில் இருந்து விலகி எப்போதும் தந்தை பெரியாரின் கொள்கைப்படியே வாழ்ந்தவன். எனவே, எனது மறைவுக்குப் பின் எனது உடலை மதச் சடங்குகளின்படி அடக்கம் செய்யக் கூடாது; மாறாக, மின் மயானத்தில் எரியூட்ட (தகனம் செய்ய) வேண்டும்” என்று சாலமன் பாப்பையா தனது உயிலில் திட்டவட்டமாக எழுதி வைத்துள்ளார்.
மத நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகத் திகழ்ந்த சாலமன் பாப்பையா, இறுதி வரை தனது கொள்கைப்படியே வாழ்ந்து காட்டியுள்ளார். ஒரு பெரியார் தொண்டனாகச் சாதி, மதமற்ற சமுதாயக் சிந்தனையைத் தனது இறுதிப் பயணத்திலும் நிலைநிறுத்தியுள்ள அவரது செயல் சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வைரலாகி வருகிறது.
