CRIME
சென்னையில் பயங்கரம்.. பெற்றோருக்குத் தெரியாமல் ஏரிக்குச் சென்ற 4 குழந்தைகள்.. மறுநாள் காலையில் காத்திருந்த அதிர்ச்சி.. பெரும் சோக சம்பவம்..!!
சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வந்த நான்கு பள்ளி மாணவ, மாணவிகள் திருநீர்மலை பெரிய ஏரியில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது. பள்ளி விடுமுறை நாளான நேற்று மதியம் தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த யுவனேஷ் (10), தேவதர்ஷன் (12), பூஜா (13) மற்றும் குஷி (13) ஆகிய நான்கு பேரும், பெற்றோருக்குத் தெரியாமல் அருகில் உள்ள ஏரிப் பகுதிக்குச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் பிள்ளைகள் வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோரும் உறவினர்களும் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இன்று காலை திருநீர்மலை ஏரிப் பகுதியில் நான்கு பிள்ளைகளின் உடல்களும் தண்ணீரில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, குரோம்பேட்டை காவல் நிலைய போலீசாரும் தாம்பரம் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஏரியிலிருந்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர், உடற்கூறாய்வு பரிசோதனைக்காக உடல்கள் அனைத்தும் தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் படித்து வந்த இந்த நான்கு சிறுவர், சிறுமிகளும் ஏரியில் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கியபோது, அங்கிருந்த எதிர்பாராத ஆழமான சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி நீரில் மூழ்கிப் பலியாகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. விடுமுறை நாளில் விளையாடச் சென்ற பள்ளிப் பிள்ளைகள் பிணமாக மீட்கப்பட்ட இந்த கோர விபத்து குறித்துக் குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
