LATEST NEWS
அய்யோ பாவம்…! மூக்கில் ரத்தம் கொட்டுது பாருங்க சார்… முழுசா ஏறும் முன்னாடியே மூடிய ‘ஆட்டோமேட்டிக் கதவை மூடிய ‘ஓட்டுநர்… நடுரோட்டில் கொதித்தெழுந்த பயணிகள்..!!
கோவையில் அரசு டவுன் பேருந்தின் ஆட்டோமேட்டிக் கதவு திடீரென மூடப்பட்டதில், பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் முகம் மற்றும் மூக்கு கதவுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உக்கடத்தில் இருந்து சோமனூர் நோக்கிச் சென்ற 30எச் வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பேருந்து, இருகூர் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது, பேருந்தின் பின்பக்க படிக்கட்டு வழியாக பெண் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தபோது, ஓட்டுநர் பின்புறம் கவனிக்காமல் அவசரமாக ஆட்டோமேட்டிக் கதவை மூடியுள்ளார். இதில் படியில் ஏறிக்கொண்டிருந்த பெண் பயணியின் முகம் மற்றும் மூக்கு கதவுகளுக்கு இடையே மாட்டி நசுங்கியதில், அவரது வாய் மற்றும் மூக்குப் பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியதுடன் பலத்த காயமும் ஏற்பட்டது.
பேருந்து நிறுத்தப்பட்டதும், நடத்துநர் மற்றும் ஓட்டுநரின் இந்த அலட்சிய போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
