LATEST NEWS
அடப்பாவிகளா…! இது என்ன புது கூத்தா இருக்கு… திருடிய வீட்டிலேயே 5 நாள் ஜாலியா தங்கி… சமையல் செஞ்சு சாப்பிட்ட திருடர்கள்..! கோவையில் நடந்த வினோத சம்பவம்..!!
கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் சேஷகிரி என்பவரின் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் திருடிய வீட்டிலேயே 5 நாட்கள் தங்கி, சமைத்துச் சாப்பிட்டு தூங்கிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்த ஆடிட்டர் சேஷகிரி, பெங்களூருவில் உள்ள தனது மகனைப் பார்ப்பதற்காகக் கடந்த மாதம் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் கோவை திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்ததோடு, பூஜை அறை மற்றும் சமையல் அறையில் இருந்த 9 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 7 கிலோ பித்தளைப் பொருட்கள் உள்ளிட்ட ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வெங்கடேஷ், ராஜசேகர், டேவிட் லிவிங்ஸ்டன், மணிகண்டன் என்ற விக்கி, மணிகண்டன் என்ற சிறுத்தைமணி, ஜமீசா ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். ஆடிட்டர் வீட்டைப் பூட்டிச் சென்றதை நோட்டமிட்ட இக்கள்ளர்கள், உள்ளே புகுந்து திருடியதுடன், அவ்வீட்டிலேயே 5 நாட்கள் தங்கி சமைத்துச் சாப்பிட்டுத் தூங்கியுள்ளனர். புகாரளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
