LATEST NEWS
ஜஸ்ட் 5 செகண்ட் ரீல்ஸ்க்காக இதையா செய்வீங்க..? வந்தே பாரத், தேஜஸ் ரயில்கள் மீது கல்வீசி தாக்குதல்… 5 நாளில் 134 பேர் தூக்கல்… 12 மாவட்டங்களை அதிரடியாக ‘ரெட் ஜோன்’ ஆக அறிவித்த ரயில்வே காவல்துறை..!!
பீகாரில் சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் எடுத்து வெளியிடும் மோகத்தால், ரயில்கள் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வந்தே பாரத், தேஜஸ் மற்றும் ஜன் சதாப்தி போன்ற நவீன ரயில்களைக் குறிவைத்து இந்த ரீல்ஸ் உருவாக்குபவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில், கடந்த 5 நாட்களில் மட்டும் 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இதில் 40 பேர் சிறுவர்கள் ஆவர். தலைநகர் பாட்னா, போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசராய், பெத்தியா, மதுபானி, முசாபர்பூர், நாளந்தா, சாரன், கயா, வைஷாலி மற்றும் நவாதா ஆகிய 12 மாவட்டங்களை ரயில் மீது கல்வீச்சு நடைபெறும் ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகளாக பீகார் காவல் தலைமையகம் அடையாளம் கண்டுள்ளது.
ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு காட்சிகளின் உதவியோடு இந்த கல்வீச்சில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், வெறும் சில நொடிகள் ஓடக்கூடிய வைரல் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களைப் பதிவு செய்வதற்காகவே அவர்கள் இந்த ஆபத்தான செயலில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். காவல்துறை தலைமையகத்தின் அறிக்கையின்படி, ஏப்ரல் மாதத்தில் இத்தகைய கல்வீச்சு சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன. மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான வார இறுதி விடுமுறை நாட்களில் தான் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து, அடையாளம் காணப்பட்ட 12 மாவட்டங்களின் கல்வீச்சுப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே காவல்துறைக்கு காவல் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் ரயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை உள்ளது என்றும், சமூக ஊடக வீடியோக்கள் என்ற பெயரில் ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்போடு விளையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
