LATEST NEWS
“நீ யாருக்கு பிறந்த..? எனக்கு சந்தேகமா இருக்கு” அமைச்சர் நிர்மல்குமாரை தனிப்பட்ட முறையில் தாக்கி ஆ.ராசா கடும் விமர்சனம்.. அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை..!!
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் ஆகியோரை விமர்சித்து, சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மிகக் கடுமையான கருத்துகளை முன்வைத்துப் பேசினார். சட்டப்பேரவையில் திமுக தலைவர்கள் மற்றும் மிசா தியாகங்கள் குறித்துத் தவறாகப் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசா, “ஏழு கட்சிகள் மாறிய ஒரு நபர் இன்று அமைச்சர்; அவருக்கு ஒரு தலைவர்” என்று அமைச்சர் நிர்மல்குமாரையும் முதலமைச்சர் விஜய்யையும் மிகக் காரசாரமாகச் சாடினார். மேலும், “எங்களுக்கு முதலமைச்சர் பதவி, கார், கேபினெட் அந்தஸ்து எல்லாம் கால்தூசிக்குச் சமம்” என்று குறிப்பிட்ட அவர், “நான் முதலமைச்சரைப் பார்த்து நேரடியாகச் சொல்கிறேன், முடிந்தால் என் மீது வழக்குத் தொடருங்கள்” என்று மேடையில் சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிசா சிறைவாசம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய அமைச்சர் நிர்மல்குமாரை நோக்கி, “நீ யாருக்குப் பிறந்தாய் என்றே எனக்குச் சந்தேகம் இருக்கிறது” என்று தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தாக்கினார். முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அரசியல் முதிர்ச்சியின்றித் தரம் தாழ்ந்து பேசி வருவதாக ஆ.ராசா தனது உரையில் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.
