LATEST NEWS
“யார் இந்த ரத்தீஷ்..?” திமுக ஆட்சியை நடத்தியதே இவர் தான்.. உதயநிதி ஸ்டாலினுடன் 24 மணி நேரமும்… அரசியல் வட்டாரத்தை உலுக்கிய அமைச்சர் CTR-ன் கேள்வி…!!
கடந்த திமுக ஆட்சியை நிழலாக இருந்து நடத்தியதே ரத்தீஷ் வேலு என்பவர்தான் என்று தவெக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் அவரது குறிஞ்சி இல்லத்தில் 24 மணி நேரமும் இந்த ரத்தீஷ் என்பவர்தான் உடனிருந்தார் என்றும், தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து ஒட்டுமொத்த அரசாங்கத்தையே இவர் தான் இயக்கியுள்ளார் என்றும் பரபரப்பாகத் தெரிவித்தார்.
தற்போது தவெக அரசு கடந்த கால ஊழல்களை விசாரித்து வரும் நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்புடைய இந்த ரத்தீஷ் வேலு தற்போது தலைமறைவாக உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார். முன்னதாக, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய் உரையாற்றியபோது, “யார் இந்த ரத்தீஷ்?” என்று கேள்வி எழுப்பி, கடந்த ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகம் இவருடைய முழுக் கட்டுப்பாட்டில்தான் இயங்கியது என்று ஆவேசமாகக் குறிப்பிட்டிருந்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
