LATEST NEWS
அய்யய்யோ தங்கம் கிடைக்காதா… செப்டம்பர் 15 பிளான் எல்லாம் வேஸ்ட் தானா..? தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு விழுந்த திடீர் பிரேக்… அமைச்சர் அருண் ராஜ் பரபரப்பு விளக்கம்..!!
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண் ராஜ் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். குறிப்பாக, குழந்தைகளுக்கு அதிகளவில் தேவைப்படுவதால் போன் மாரோ எனப்படும் எலும்பு மஜ்ஜை தானம் செய்யப் பொதுமக்கள் முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். மேலும், ரத்த தானம் மற்றும் கண் தானம் போன்றே ஸ்டெம்செல் தானத்திற்கான முன்பதிவும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான பதிவு முறைகள் தொடங்கப்பட்டு, மருத்துவமனைகளின் உட்கட்டமைப்புப் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டுத் தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.
அரசு சார்பில் வழங்கப்பட உள்ள ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தரம் குறித்துப் பேசிய அமைச்சர் அருண் ராஜ், இத்திட்டத்தில் வழங்கப்பட உள்ள தங்கத்தில் எவ்வித குறையும் இருக்காது எனத் தெரிவித்தார். வழங்கப்படும் தங்கம் 916 ரகத்தைச் சேர்ந்ததுதானா என்பதை முறையாகச் சோதனை செய்த பின்னரே திட்டத்திற்காக அனுப்பப்படும் என்றும், பயனாளர்களும் அந்த மோதிரத்தைச் சோதனை செய்து கொள்ளலாம் என்றும் விளக்கம் அளித்தார்.
இதனிடையே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 15-ம் தேதி தொடங்கப்பட இருந்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிப்போவதாக அமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாகவே முன்நிர்ணயிக்கப்பட்ட தேதியில் திட்டத்தைத் தொடங்க முடியவில்லை என்று கூறிய அவர், இத்திட்டம் தொடங்கும் புதிய தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
