LATEST NEWS
ஏசி கோச்சில் அத்துமீறிய பயணி… தட்டிக்கேட்ட ரயில்வே அதிகாரியின் விரலைக் கடித்துக் குதறிய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்..!
சாபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப் பெட்டி டிக்கெட்டை எடுத்துக் கொண்டு ஏசி கோச்சில் பயணித்த பயணி ஒருவர், அதைத் தட்டிக்கேட்ட ரயில்வே அதிகாரியின் கட்டை விரலைக் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. லக்னோவிலிருந்து மதுரா சந்திப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், டிக்கெட் பரிசோதகர் மனோஜ் குமார் சவுகான் பணியில் இருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ரயில் கஞ்சுதுந்த்வாரா நிலையத்திலிருந்து காஸ்கஞ்ச் நோக்கிப் புறப்பட்ட போது, ஏசி ஏ-1 (A-1) பெட்டியில் பயணி ஒருவர் அமர்ந்திருப்பதை அதிகாரி கண்டறிந்தார். அவரிடம் சோதனை செய்தபோது பொதுப் பெட்டிக்கான டிக்கெட் மட்டுமே இருந்தது உறுதியானதால், விதிமுறைப்படி அவரை பொதுப் பெட்டிக்குச் செல்லுமாறு அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பயணி, அதிகாரியிடம் தகராறில் ஈடுபட்டு திடீரென அவரது இடது கை கட்டை விரலைக் கடித்துக் குதறியதுடன், கையின் பல இடங்களிலும் பற்களால் கொடூரமாகக் கடித்தார். இந்தத் தாக்குதலில் அந்த ரயில்வே அதிகாரியின் கட்டை விரல் எலும்பு வெளியே தெரியும் அளவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து செயல்பட்ட காஸ்கஞ்ச் இரயில்வே பாதுகாப்புப் படை கூட்டுத் குழுவினர், காயமடைந்த அதிகாரிக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மேலும், இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்ட இக்பால் (38) என்ற அந்தப் பயணியைக் காஸ்கஞ்ச் ரயில் நிலையத்திலேயே வைத்துப் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட குற்றவாளி இக்பால் மீது ஏற்கனவே கலவரம் செய்தல் மற்றும் பிறரைத் தாக்கியது தொடர்பான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
