LATEST NEWS
“தவெக அமைச்சரவையில் அதிரடி ‘ஆபரேஷன்’..! 3 அமைச்சர்களைத் தூக்க முதல்வர் விஜய் அதிரடி முடிவு.. புது முகங்களுக்குக் கிடைக்கும் ஜாக்பாட்.. வெளியான பரபரப்பு தகவல்..!!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும், தற்போதுள்ள அமைச்சர்களில் மூன்று பேர் நீக்கப்பட்டு புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது முதல்வர் விஜய் வசம் இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நிர்வாகக் காரணங்களுக்காக வேறு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்கப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக, இத்துறை தற்போதைய அமைச்சர் ராஜ்மோகனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்படலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், இந்த அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் மதுரை மாவட்டத்திற்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்க முதலமைச்சர் விஜய் விரும்புகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் உள்ள மொத்தம் 10 தொகுதிகளில் தவெக அமோக வெற்றி பெற்ற போதிலும், அந்த மாவட்டத்திற்கு தற்போது ஒரே ஒரு அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ரசிகர் மன்ற காலத்திலிருந்தே விஜய்யுடன் பயணித்து வரும் மதுரையைச் சேர்ந்த மற்றொரு தவெக எம்.எல்.ஏ-வுக்குக் கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியை வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
