LATEST NEWS
“இது உங்க அண்ணனோட அரசு… பொதுமக்கள் எங்களை வழிமறித்து கூட பிரச்சனைகளைச் சொல்லலாம்…!” மதுரையில் நடைபெற்ற போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு..!!
மதுரை காந்தி மியூசியத்தில் தனியார் பள்ளி சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- போதை பொருட்கள் சாக்லெட் உள்ளிட்ட எல்லா வடிவிலும் கிடைக்கிறது. இதுகுறித்து தெரிந்தால் மாணவர்கள் உடனே ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். இது உங்கள் அண்ணனோட அரசு. நீங்கள் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய அரசு தான் இது. 100 சதவீத உரிமை உங்களுக்கு உள்ளது.
மாணவ-மாணவிகளாகிய நீங்கள் பள்ளிக்கு செல்லும்போது இடையூறு வந்தாலோ, போதை பொருள் விற்பனை தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தால், எந்த பயமுமின்றி ஆசிரியர்களிடம் கூறுங்கள். உங்களுக்கு வேலை பார்க்க தான் த.வெ.க. அரசு உள்ளது. போதை பொருள் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக நீங்கள் மற்றவர்களிடம் எடுத்து கூற வேண்டும். காவல்துறை முன்புபோல இல்லை.
குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலமைச்சர் விஜய்யின் முதல் முன்னுரிமை. பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் செல்லும்போது எங்களை வழி மறித்து கூட சொல்லுங்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கோபிசன், மதார் பதூருதின் என்ற முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
