LATEST NEWS
“வெளியூர்க்காரங்க நிலம் மட்டும்தான்…” உள்ளூர் மக்களின் ஒரு செண்ட் நிலத்தைக் கூட தொடல… பரந்தூர் விமான நிலைய நில கையகப்படுத்துதலில் அமைச்சர் உடைத்த உண்மைப் புள்ளிவிவரம்..!!
பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டம் தொடர்பாக 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் இதுதொடர்பான காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
திமுக ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்திற்காக 90 சதவீத நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு விட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். இதற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பரந்தூர் திட்டத்திற்காக 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது என்பது முற்றிலும் தவறான தகவல் என்று மறுத்தார். இதுவரை மொத்தம் உள்ள நிலங்களில் சுமார் 48 சதவீத நிலம் (1,802 ஏக்கர்) மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை அவர் புள்ளிவிவரங்களுடன் உடைத்துக் காட்டினார்.
மேலும் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், கையகப்படுத்தப்பட்ட நிலங்களிலும் கூட வெளியூரில் வசிப்பவர்களின் நிலங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன என்றும், உள்ளூரில் நேரடியாக வசிக்கும் மக்களின் ஒரு செண்ட் நிலம் கூட அரசு கையகப்படுத்தவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நீர்நிலைகளை அழித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதித்தும் இந்த விமான நிலையத் திட்டம் செயல்படுத்தப்படாது என்பதில் தவெக அரசு உறுதியாக இருப்பதாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்கள் பாதிக்காத வகையில் மாற்றுத் தொழில் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
