CRIME
“அய்யோ கொடுமையே… 10 செகண்ட்ல 9 அடி…” டீக்கடைக்காரரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூர கொலை… நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!
ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் நபர் ஒருவர் திடீரென வன்முறையில் ஈடுபட்டு, பல இடங்களில் மக்களைத் தாக்கிய பிறகு, கடையில் இருந்த ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னாலில் உள்ள கரவுண்டா பகுதி வீர் ரைஸ் அருகே காலை 6 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் தேஜ்பீர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது டீக்கடைக்கு வந்து அதைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, நேபாளத்தைச் சேர்ந்த உத்தம் குமார் என்ற குற்றவாளி இரும்புக் கம்பியுடன் கடைக்குள் புகுந்து அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, குற்றவாளி உத்தம் குமார் தேஜ்பீர் சிங்கின் தலையில் சுமார் 10 வினாடிகளுக்குள் 9 முறை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த தலைக் காயமடைந்த தேஜ்பீர் சிங்கை அங்கிருந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த உயிர்ப்பலி தாக்குதலுக்கு முன்பாக, குற்றவாளி உத்தம் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரைத் தாக்க முயன்றதாகவும், ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
அருகிலுள்ள சர்வீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்த உத்தம் குமார், முந்தைய நாள் இரவில் அங்கு கலாட்டா செய்ததால் அவருடைய முதலாளி அவரை ஒரு அறைக்குள் பூட்டி வைத்துள்ளார். பின்னர் அந்த அறையின் கதவுக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தப்பிய உத்தம், இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளார். தேஜ்பீர் சிங்கைக் கொன்ற பிறகு தப்பியோட முயன்ற உத்தமை அப்பகுதி மக்கள் பிடித்துத் தர்ம அடி கொடுத்துள்ளனர். இதன்பின் காவல்துறை இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. அங்கு உத்தமிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து உடற்கூறாய்வுக்காக சடலத்தை அனுப்பியுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே குற்றவாளி மற்றும் சர்வீஸ் ஸ்டேஷன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேஜ்பீரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
