LATEST NEWS
“ஈ பறக்கத்தான் செய்யும்… நாம இந்தியாவுல இருக்கோம்..!”ஐந்து நட்சத்திர ஹோட்டல் வழக்கில் நீதிபதியின் கலகலப்பான கருத்து..!!
நவி மும்பையில் உள்ள ‘பார்க் இன் பை ரேடிசன்’ என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சமையலறையில் கரப்பான்பூச்சிகள் மற்றும் சுகாதாரக் கேடு இருப்பதாகக் கூறி, அதன் உணவு உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்த ஹோட்டல் நிர்வாகம் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிபதிகள் ரவீந்திர குகே மற்றும் கெளதம் அகண்ட் அடங்கிய மும்பை உயர் நீதிமன்ற அமர்வு இதனை விசாரித்தது.
இந்த விசாரணையின் போது பூச்சிகள் மற்றும் சுகாதாரம் குறித்த பேச்சு எழுந்தபோது, நீதிபதி ஒருவர் நகைச்சுவையாக, “கடந்த வாரம் நீதிமன்றத்தில் என் மேசையின் மீதே ஒரு பெரிய பூச்சி அமர்ந்திருந்தது. இப்போதும் இங்கே ஒரு ஈ பறந்து கொண்டிருக்கிறது; நாம் இந்தியாவில் இருக்கிறோம், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? நாம் நடைமுறைக்கு ஏற்ற யதார்த்தமான அணுகுமுறையைக் கையாள வேண்டும்” என்று குறிப்பிட்டார். ஹோட்டல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தகுந்த எழுத்துப்பூர்வமான காரணங்களை வழங்காமல், வெறும் சரிபார்ப்புப் பட்டியலை மட்டும் வைத்து உரிமத்தை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார்.
சமீபகாலமாக உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் சுகாதார முறைகேடுகளைத் தடுக்க மகாராஷ்டிரா FDA தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சமையலறையில் கரப்பான்பூச்சிகள், அழுகிய காய்கறிகள், கழிவுநீர் அடைப்பு மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டதால், ‘கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா’ , MIG கிரிக்கெட் கிளப் உள்ளிட்ட பல முன்னணி கிளப்புகளின் உணவு உரிமங்களையும் FDA ரத்து செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
