LATEST NEWS
ஆக்ஷன் எடுக்கல ஐயா…! மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த விவசாயி…. தென்காசியில் பகீர் சம்பவம்…!!
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு, அறிவிக்கப்பட்ட நேரத்தை விட இரண்டு மணி நேரம் தாமதமாகியும் கலெக்டரோ அல்லது முக்கிய அதிகாரிகளோ வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறி, பழைய குற்றால அருவிக்கான கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வருகை தந்ததைத் தொடர்ந்து, சமாதானமடைந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க மீண்டும் கூட்ட அரங்கிற்குள் சென்றனர்.
அப்போது பாம்புகோவில்சந்தை பகுதியைச் சேர்ந்த பூவைய்யா என்ற விவசாயி, ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து அதிகாரிகள் முன்னிலையிலேயே குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவரை உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பூவைய்யா தனது நிலத்தில் பயிரிட்டிருந்த வாழை மற்றும் பூக்களைச் சிலர் தொடர்ந்து சேதப்படுத்தி வந்ததாகவும், இதுகுறித்து சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனமுடைந்து அவர் இந்த முடிவை எடுத்தது தெரியவந்தது.
