CINEMA
அன்புச் சகோதரர் அஜித்…”தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை…” அஜித்தின் தாயார் மறைவுக்கு உருகிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85), இன்று காலை வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். மறைந்த பி.எஸ். மணியின் மனைவியான இவர் அஜித்குமார், அனில்குமார், அனுப் குமார் ஆகியோரின் தாயாராவார். கடந்த 2023-ஆம் ஆண்டு அஜித்தின் தந்தை காலமான நிலையில், தற்போது குடும்பத்தின் தூணாக விளங்கிய தாயாரையும் இழந்து தவிக்கும் அஜித் குடும்பத்தினருக்கு இத்துயரச் செய்தி பேரிழப்பாக அமைந்துள்ளது. மறைந்த மோகினி மணியின் இறுதிச்சடங்குகள் சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் நடைபெற உள்ளன.
பெற்றோர் மீது அளவற்ற பாசமும் நெருக்கமான பிணைப்பும் கொண்டிருந்த அஜித்துக்கு, அவரது அன்னையின் மறைவு ஆறாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் அஜித்தின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அஜித்குமாருக்கு உருக்கமான இரங்கல் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்” எனக் குறிப்பிட்டுத் தனது துயரத்தைப் பகிர்ந்துள்ளார்.
