CINEMA
இதெல்லாம் ஒரு வார்த்தையா மாஸ்டர்?…தேர்தலுக்கு முன்பே இப்படியா? விஜய் கட்சிக்கு லாரன்ஸால் வந்த சோதனை…தளபதி விஜய்க்குப் பாதிப்பு ஏற்படும்…உங்களை நம்பி பின்னால் ஒருத்தர் நிற்கிறார்… லாரன்ஸை எச்சரித்து விஜய்க்காகக் குரல் கொடுத்த தாடி பாலாஜி…!
பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவாளருமான ராகவா லாரன்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கருத்து, தற்போது அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக-வின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய லாரன்ஸ், “புதிதாக ஒரு இடத்திற்குப் போகும்போது அங்கிருக்கும் தெரு நாய்கள் நம்மைப் பார்த்துக் கத்தும். அந்த நாய்க்குப் பிடித்த மாதிரி நாம் பிஸ்கட்டோ அல்லது பிரியாணியோ போட வேண்டும். ஒரு சாதாரண நாய் வளர்ப்பதற்கே இவ்வளவு விஷயங்கள் தேவைப்படும்போது, ஒரு மாநிலத்தையே கையில் கொடுக்கும்போது அவர்களுக்கு நாம் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று பொதுமக்களை மறைமுகமாகத் தெரு நாய்களுடன் ஒப்பிட்டு ஒரு விசித்திரமான உதாரணத்தைக் கூறியிருந்தார். இந்த ஒப்புமைப் பேச்சு தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாரன்ஸின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு, தவெக-வின் மற்றொரு தீவிர ஆதரவாளரும் பிரபல சின்னத்திரை நட்சத்திரமுமான தாடி பாலாஜி தனது கடுமையான கண்டனங்களை வீடியோ மூலம் பதிவு செய்துள்ளார். அதில் மிகவும் கொதித்தெழுந்த பாலாஜி, “உங்களை மனப்பூர்வமாக ஆதரித்த பலரின் மனதை இந்த வார்த்தைகள் வலிக்கச் செய்துள்ளன. சில நாய்களுக்கு பிஸ்கட் போட வேண்டும், சில நாய்கள் பிரியாணி தான் சாப்பிடும் என்று சொல்லி இருக்கிறீர்களே… இதெல்லாம் ஒரு வார்த்தையா மாஸ்டர்? அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு எடுத்த பிறகு, பொதுவெளியில் வார்த்தைகளை எவ்வளவு கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? பலருக்கு உதவி செய்யும் ஆன்மீகவாதியான நீங்கள் மக்களை எப்படி நாய் என்று சொல்லலாம்? இது மிகப்பெரிய தவறு” என்று லாரன்ஸை மிகக் கறாராக வெளுத்து வாங்கியுள்ளார்.
மேலும், இந்த தவறான பேச்சால் கட்சிக்கும் அதன் தலைவருக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தாடி பாலாஜி எச்சரித்துள்ளார். “இன்னும் தேர்தலே வரவில்லை, உங்களை அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் கூட அறிவிக்கவில்லை. அதற்குள் நீங்கள் பயன்படுத்தும் இந்த தவறான வார்த்தை, உங்களை நம்பி பின்னால் நிற்கும் கட்சித் தலைவரையும் நேரடியாகப் பாதிக்கும். இதனால் நமக்கும், நாம் இருக்கும் கட்சிக்கும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். எனவே, இனிவரும் நாட்களில் இது போன்ற வார்த்தைகளைப் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்; அதோடு நீங்கள் பேசிய இந்த வார்த்தைக்காகத் தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் தாடி பாலாஜி அந்த வீடியோவில் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
