CINEMA
ரஜினி, கமல் முகத்துல ஏஐ (AI) டெக்னாலஜியா?…40 வருசத்துக்கு அப்புறம் ரஜினி – கமல் கூட்டணி…”நெல்சன் என்ன செய்யப்போறாரு?… மேடையிலேயே ஓப்பனாக பேசிய ஸ்ருதிஹாசன்…இயக்குனருக்கு 1000 கோடி அதிர்ஷ்டம்…பின்னணி என்ன?…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், இந்திய திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘KHXRK’. திரையுலகமே வியப்போடு எதிர்பார்க்கும் இத்திரைப்படம், இரு துருவங்களும் இணைந்து நடிக்கும் கடைசிப் படமாக இருக்கலாம் என்று கருதப்படுவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட்டையும் தாண்டி இந்திய அளவில் எகிறியுள்ளது. கண்டிப்பாக இப்படம் 1000 கோடி ரூபாய் வசூலைத் தொடும் முதல் தமிழ் படமாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. முன்னதாக, இவர்களை இயக்க லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்கப்பட்ட நிலையில், அவர் வன்முறை நிறைந்த கதையைக் கூறியதால், ரஜினி-கமல் இருவரின் ‘குட் புக்கில்’ இருக்கும் நெல்சனுக்கு இந்த மெகா வாய்ப்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ க்ளிம்ப்ஸ் வீடியோ, ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வீடியோவில் ரஜினி மற்றும் கமலின் தோற்றங்கள் எதார்த்தமாக இல்லை என்றும், ஏதோ ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது போல் செயற்கையாக இருப்பதாகவும் ரசிகர்கள் ஓப்பனாகவே சலிப்பைப் பதிவு செய்தனர். ‘பீஸ்ட்’ சொதப்பலுக்குப் பின் ‘ஜெயிலர்’ மூலம் மெகா ஹிட் கொடுத்த நெல்சன் திலீப்குமார், தன் இயல்பான நகைச்சுவை பாணியையும், திறமையையும் முதலீடு செய்து, முழுத் திரைப்படத்தில் இந்தக் குறைகள் அனைத்தையும் சரிசெய்து தரமாகப் பிரம்மாண்டத்தைக் கொடுப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனிடம் இப்படம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே செம ஹேண்ட்சமான மனிதர்கள். ஆனால், இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். ‘கூலி’ திரைப்படத்தில் பணியாற்றிய பிறகு ரஜினியின் தனித்துவமான குணத்திற்காகவே நான் அவரது தீவிர ரசிகையாக மாறிவிட்டேன். இந்த இரு பெரும் ஆளுமைகளையும் ஒரே திரையில் பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களைப் போல நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்; நெல்சன் இதில் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பார்க்கவும் ஆசையாக இருக்கிறது” என்று உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
