CINEMA
மருந்து வாங்கக்கூட கையில் காசில்லை… ஜெயலலிதா இருந்திருந்தா என் வாழ்க்கை இப்படி ஆகியிருக்காது…! 80 வயதில் அனாதையாய் தவிக்கும் மூத்த நடிகரின் கண்ணீர் கதை..!!
திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் வலம் வந்தவர் மோகன் சர்மா. புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற இவர், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சச்சின்’, ‘சலங்கை ஒலி’, ‘ஏணிப்படிகள்’ போன்ற பிரபல திரைப்படங்களிலும், ‘கோலங்கள்’ சின்னத்திரை தொடரிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், 20 படங்களைத் தயாரித்து முத்திரை பதித்துள்ளார். மேலும், தேசிய திரைப்பட விருது மற்றும் இந்திய பனோரமா தேர்வுக் குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
இவர் இயக்கித் தயாரித்த ‘நம்ம கிராமம்’ திரைப்படம் தமிழக மற்றும் கேரள அரசுகளின் விருதுகளை வென்றதோடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாராட்டையும் பெற்றது. எனினும், அப்படத்தை தயாரிக்க வங்கிக் கடன் பெற்றதாலும், சொத்துகளை விற்றதாலும் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார். ஜெயலலிதா கடனை அடைக்க உதவுவதாகக் கூறியிருந்த நிலையில், அவரது மறைவால் அது நிறைவேறாமல் போனது. இதன் காரணமாக, கையில் பணமின்றி 80 வயதில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
உடல்நலக் குறைபாடுகளால் மருந்து வாங்கக்கூட வழியின்றி தவித்த இவருக்கு, நடிகர் ரஜினிகாந்த் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். தற்போது தனிமையில் வாழும் மோகன் சர்மா, தனது ‘நம்ம கிராமம்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினால் மருத்துவச் செலவுகளுக்கு உதவியாக இருக்கும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஃபிலிம் சேம்பரில் முதிய கலைஞர்களுக்கான உதவி விதிமுறைகள் மாற்றப்பட்டது குறித்து வேதனை தெரிவித்துள்ள இவர், உதவி கோரி தமிழக முதல்வர் விஜயை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கிறார்.
