CINEMA
விஜய் அண்ணா சிஎம் ஆன உடனே அட்லீயும் சட்டசபைக்கு போயிட்டாரா?…அட்லீ படம் மாதிரி காப்பி அடிக்கிறீங்க…திமுகவின் அட்லீ அட்டாக்குக்கு அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த அதிரடி பதில் … சைலண்டான சட்டசபை…!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவையில் இயக்குநர் அட்லீயின் பெயர் இழுக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை உற்றுநோக்கி வரும் அவரது ரசிகர்களுக்கு, இக்கூட்டத்தொடர் பெரும் சுவாரசியத்தை அளித்துள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் தேசிய கீதம் விவகாரத்தில் சர்ச்சை வெடித்ததோடு, திமுக உறுப்பினர்கள் விஜய்யை விமர்சிக்கும் வகையில் “மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்”, “திரையில் நாயகன் தரையில் வில்லன்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்து அதிரடி காட்டினர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் தவெக அரசின் திட்டங்களை விமர்சித்துப் பேசிய திமுகவின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “இயக்குநர் அட்லீ எப்படி ஏற்கனவே ஹிட்டான பழைய படங்களில் இருக்கும் சிறந்த காட்சிகளை மட்டும் எடுத்து ஒரு புதிய படத்தை உருவாக்குவாரோ; அதேபோலத்தான் திமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நீங்கள் உங்களுடைய புதிய திட்டம் போலக் கூறி வருகிறீர்கள்” என்று கிண்டலாகக் சாடினார். அட்லீயின் திரைப்பட பாணியை தவெக அரசின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு அவர் பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “முழுநேர அரசியல்வாதியான சிவசங்கருக்கு அட்லீயைப் பற்றித் தெரிந்திருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது; தற்போதைய ஆட்சிக்கும் இந்த பேரவை தொடருக்கும் அட்லீக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், தேவையில்லாத விஷயங்களைப் பேச வேண்டாம் எனவும், காலமும் காட்சிகளும் இப்போது மாறிவிட்டன என்றும் அவர் சிவசங்கருக்குப் பதிலடி கொடுத்தார். ‘நண்பன்’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என விஜய்யை வைத்துப் பல படங்களை இயக்கி, அவரைத் தனது அண்ணனாகவே கருதும் அட்லீயின் பெயர் சட்டப்பேரவையில் ஒலித்ததை, “விஜய் அண்ணா சிஎம் ஆனதும் அட்லீயும் சட்டப்பேரவைக்குள்ள போயிட்டாரே” என்று நெட்டிசன்கள் ஜாலியாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
