LATEST NEWS
25 ஆண்டுகால நட்பு உடைந்தது…முதலமைச்சர் விஜயுடன் நேரடித் தொடர்பு…அண்ணாமலையா? விஜய்யா? இல்ல திமுகவா? – சி.விஜயபாஸ்கரின் அடுத்த மாஸ் மூவ்…அந்த ‘மலைக்கோட்டை’ அமைச்சர் யார்?…
அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், எட்டு ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் வலம் வந்த சி.விஜயபாஸ்கர், தற்போது தனது எம்.எல்.ஏ பதவியையும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் உருக்கத்துடன் ராஜினாமா செய்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்துக்கொண்டிருந்த போதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு, 2001-ல் தனது 26 வயதில் முதன்முறையாக புதுக்கோட்டை தொகுதியில் வென்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர். அதனைத் தொடர்ந்து விராலிமலை தொகுதியில் நான்கு முறை தொடர் வெற்றி பெற்று 25 ஆண்டுகாலம் புதுக்கோட்டை அரசியலில் அசுர வளர்ச்சி கண்டார். ஆனால், சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக தலைமை மீது சி.வி.சண்முகம் தரப்போடு இணைந்து கேள்வி எழுப்பியதால், எடப்பாடி பழனிசாமியால் அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்தவர், தற்போது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகிய விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரவற்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆளும் கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இணைந்து, முதல்வர் விஜய் முன்னிலையில் இன்னும் இரு தினங்களில் பணியாற்றவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற தலைவர்களைப் போலல்லாமல், முதல்வர் விஜயுடன் நேரடியாகப் பேசக்கூடிய அளவிற்கு நெருக்கமான நட்பு விஜயபாஸ்கருக்கு உண்டு. மேலும், கடந்த தேர்தலுக்கு முன்பே தவெக 30 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் வாங்கும் எனச் சரியாகக் கணித்து, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் விஜயபாஸ்கர் அழுத்தம் கொடுத்ததாகவும், ஆனால் தலைமை அதை ஏற்காததே தற்போதைய இந்த விலகலுக்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
விஜயபாஸ்கரின் முதல் சாய்ஸ் தவெக-வாக இருக்கும் அதே வேளையில், அவரைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக மற்றும் அண்ணாமலை தரப்பும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. விராலிமலையில் தனிப்பட்ட செல்வாக்குள்ள விஜயபாஸ்கரை திமுகவிற்குள் கொண்டு வருவதன் மூலம் மத்திய மாவட்ட உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தலாம் எனத் திருச்சி ‘மலைக்கோட்டை’ அமைச்சரும், மூத்த நிர்வாகிகளும் தொடர்ந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதேபோல், புதிதாகக் கட்சி தொடங்க ஆயத்தமாகி வரும் அண்ணாமலையும் கடந்த சில நாட்களாக இவருடன் பேசி வருவதாகத் தெரிகிறது. இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் முடிவில் விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், அரசியல் களத்தில் ஏதேனும் மாயம் நடந்தால் மட்டுமே அவர் திமுக பக்கம் சாயக்கூடும் என அரசியல் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
