CINEMA
ஜெய் ஹனுமான் படத்திற்குப் பிறகு ரிஷப் ஷெட்டி கையில் எடுத்திருக்கும் அஸ்திரம்…ரூ.500 கோடி பட்ஜெட்… இரண்டு பாகங்கள்…இந்திய சினிமாவையே உலுக்கப் போகும் ரிஷப் ஷெட்டியின் அடுத்த பிரம்மாண்டம்…!
தேசிய விருது பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி, ‘காந்தாரா’ திரைப்படத்தின் மாபெரும் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வருகிறார். தற்போது இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தில் அனுமன் கதாபாத்திரத்தில் தீவிரமாக நடித்து வரும் அவர், அடுத்ததாக மற்றொரு பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படத்தில் களம் இறங்கவுள்ளார். இந்திய வரலாற்றின் புகழ்பெற்ற மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் வீரமிக்க வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘தி பிரைட் ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படத்தில் சிவாஜி மகாராஜ் வேடத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படம் தொடர்பாக சினிமா வட்டாரங்களில் இருந்து ஒரு புதிய அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சந்தீப் சிங் இயக்கும் இந்த வரலாற்றுத் காவியம், கதையின் பிரம்மாண்டம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கருதி தற்போது இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் ரூ.500 கோடிக்கும் அதிகமான மெகா பட்ஜெட்டில் பான்-இந்தியா திரைப்படமாகத் தயாராகும் இந்த வரலாற்றுப் போர்க் காவியத்தின் முதல் பாகம் 2028-ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 2029-ஆம் ஆண்டிலும் திரைக்கு வரும் எனத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவாஜி மகாராஜின் அசாத்தியமான போர்த் தந்திரங்களையும், அவரது வீர வரலாற்றையும் வெள்ளித்திரையில் தத்ரூபமாகக் கொண்டு வர படக்குழுவினர் இப்போதே விரிவான திட்டமிடல்களைத் தொடங்கியுள்ளனர். இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், காந்தாரா படத்திற்குப் பிறகு ரிஷப் ஷெட்டியை சத்ரபதி சிவாஜி மகாராஜாக, கம்பீரமான தோற்றத்தில் திரையில் காண ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
