CINEMA
புஷ்பா ராஜ்-க்கு வந்த புதுச் சிக்கல்…திரையுலகையே உலுக்கிய புஷ்பா 2 தியேட்டர் விபத்து…வெளிநாடு செல்ல தடை?” – அல்லு அர்ஜுனின் சம்மனுக்குப் பின்னால் இருக்கும் நீதிமன்ற நிபந்தனைகள்…!
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வழக்கை விசாரித்து வரும் ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி நீதிமன்றம், நடிகர் அல்லு அர்ஜுனை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு அதிரடியாகச் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்தத் திரைத்துறையினரிடையேயும், ரசிகர்கள் மத்தியிலும் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024 டிசம்பர் 4-ம் தேதி இரவு, புஷ்பா-2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியைக் காணத் திரையரங்கில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கட்டுப்பாடற்ற கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகன் தேஜ் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சோகச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தி இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனை 11-வது குற்றவாளியாகச் சேர்த்தனர்.
திரையரங்க நிர்வாகத்தினர் மற்றும் நடிகரின் மேலாளர் உள்ளிட்ட 23 பேருக்கு எதிராக போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் சில கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தின் முன்அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் நிலுவையில் உள்ள சூழலில், தற்போது நீதிமன்றம் அனுப்பியுள்ள இந்த நேரடிச் சம்மன் வழக்கின் அடுத்தகட்ட நகர்வை மிக முக்கியமான கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
