CINEMA
ஆஸ்கரே கொடுக்கலாம்…பெண்களுக்கான படம்…பத்திரிகையாளர்கள் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை.. .மேடையிலேயே வெட்கப்பட்டு சிவந்த சுவாசிகா…!
‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் தனது எதார்த்தமான மற்றும் பவர்ஃபுல்லான நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை சுவாசிகா. கேரளாவைச் சேர்ந்த இவர் ‘வைகை’ மற்றும் ‘கோரிப்பாளையம்’ ஆகிய தமிழ்ப் படங்களின் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினாலும், இடையில் மலையாளத் திரையுலகில் பிஸியானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ மெகா ப்ளாக் பஸ்டர் அடித்ததுடன், சுவாசிகாவுக்கு கோலிவுட்டில் ஒரு ரீ-என்ட்ரியையும் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படத்தில், சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் “நாங்க நாலு பேரு” பாடலில் தனது துள்ளலான நடனத்தால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
இந்நிலையில், சசி இயக்கத்தில் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் ‘நூறு சாமி’ திரைப்படத்தில் சுவாசிகா மிக முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெண்களுக்குத் தேவையான ஒரு மிக முக்கியக் கருத்தை, இயக்குநர் சசி தனது பாணியில் எவ்வித அலட்டலுமின்றி உணர்வுப்பூர்வமாகக் கடத்தியுள்ள விதம் குடும்ப ரசிகர்களை தியேட்டர்களுக்குப் படையெடுக்க வைத்துள்ளது. குறிப்பாக, இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “இந்த ஆண்டின் விருதுக்கான போட்டி தாய் கிழவி ராதிகாவுக்கும், நூறு சாமி சுவாசிகாவுக்கும்தான்” எனக் குறிப்பிட்டிருந்தது போலவே, படத்தில் சுவாசிகாவின் கனமான நடிப்பு ரசிகர்களிடம் அப்ளாஸை அள்ளி வருகிறது.
திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த படக்குழுவினர், சுவாசிகாவின் நடிப்பைப் பாராட்டி சுவாரசியமான பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது நடிகர் விஜய் ஆண்டனி, “சுவாசிகாவின் நடிப்புக்கு இந்தியாவில் ஒரு ஆஸ்கர் விருதை தயாரித்துக் கொடுக்கலாம்” என்று ஜாலியாகக் கூறி, அங்கிருந்த ஒரு காலி தண்ணீர் பாட்டிலை வாங்கி அவரிடம் வழங்கி கலகலப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து இயக்குநர் சசியும், சுவாசிகாவின் நடிப்புக்குத் தேசிய விருதே பத்தாது எனப் பத்திரிகையாளர்கள் பாராட்டுவதாகத் தெரிவிக்க, ஒட்டுமொத்தப் படக்குழுவும் செய்த இந்த கியூட் ஃபன்னால் நெகிழ்ந்துபோன சுவாசிகா வெட்கத்தில் சிவந்துபோனார்.
