LATEST NEWS
மொபைல் ஆப் வச்சிருக்கீங்களா…? அப்போ உங்களுக்குத் தான் இந்த ஆஃபர்… ஆதார் கார்டில் புதிய வசதியை அறிமுகம் செய்தது UIDAI …!!
மத்திய அரசின் முக்கிய ஆவணமாகத் திகழும் ஆதார் கார்டில் மின்னஞ்சல் முகவரியை (Email ID) இணைப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் இனி எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அதிரடியாக அறிவித்துள்ளது. வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்தச் சலுகையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது இதற்காக வசூலிக்கப்பட்டு வரும் 75 ரூபாய் கட்டணத்தை, ‘myaadhaar’ மொபைல் செயலி மூலமாகப் புதுப்பிக்கும் போது முற்றிலும் தவிர்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆதார் சார்ந்த பணப்பரிவர்த்தனைகள் மற்றும் அறிவிப்புகளைப் பயனர்கள் தங்களின் மின்னஞ்சல் வாயிலாக உடனுக்குடன் தெரிந்துகொள்ள இயலும்.
அதேவேளையில், மொபைல் செயலியைத் தவிர்த்து இதர வழிகளில் மின்னஞ்சலைப் புதுப்பித்தால் வழக்கமான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், ஆதாரில் பெயர், பாலினம், இருப்பிட முகவரி போன்ற இதர விபரங்களைப் புதுப்பிப்பதற்கான இலவச ஆன்லைன் ஆவணப் புதுப்பிப்பு வசதியானது, வரும் 2027 ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையை ‘myaadhaar’ இணையதளம் வழியாக மட்டுமே கட்டணமின்றிப் பெற முடியும். குறிப்பாக, 5 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆதார் புதுப்பித்தல் பணிகளும் எந்தவிதக் கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகவே செய்து தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
